தமிழ்நாட்டில் குமரிமாவட்டம் – பள்ளியாடி – குமரித்தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த ஊர். இங்குள்ள மூரியங்கோணத்தில் 16-11-1980 – ல் தமிழ் ஆர்வலர் திரு.மத்தியாஸ் திருமதி.மரியம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார் திரு.ஸ்டாலின் பெலிக்ஸ்.
நாகர்கோவில், சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுச் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றினார். மேலும் வரலாறு மற்றும் வணிக நிர்வாகவியல் கல்வியில் முதுகலைப்பட்டமும் பெற்றிருந்தார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட ஸ்டாலின் பெலிக்ஸ், கல்லூரியில் பயிலும் போதே தாய் மொழி மீதும், தமிழ் அமைப்புகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.
சிறந்தச் சிந்தனையாளராக, சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய இவர் கல்வி, மருத்துவம், இரத்த தானம் எனத் தன்னால் இயன்ற உதவிகளை நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும் செய்து வந்தார்.


தமிழ் தேசியச் சிந்தனையாளரான ஸ்டாலின் பெலிக்ஸ், ஈழ விடுதலை தொடர்பாகத் தமிழகத்தில் நடந்தப் பல்வேறு போராட்டங்களிலும் களமாடியவர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அவரது எழுத்துக்களும் களப்போராட்டங்களும் அவர் ஒரு சூழியல் சிந்தனையாளர் என்பதற்குச் சான்று.
குமரி சுனாமி, தானே, சென்னை வெள்ளம், ஓகி எனப் பெரும் பேரிடர்களில் நண்பர்களை ஒருங்கிணைத்து உதவிகள் தேவைப்படுவோருக்கு பல உதவிகள் வழங்கினார்கள்.
இவ்வாறு, மனித நேயமிக்க ஒரு சிறந்த மனிதராக வாழ்ந்த ஸ்டாலின் பெலிக்ஸ், உடல் நலக்குறைவால் 15.02.2019- ல் மரணமடைந்தார்.
சிறிதொரு காலமே வாழ்ந்தாலும், “இவன் தந்தை என் நோற்றான்” என்று வள்ளுவம் மகற்குரைத்த வாழ்வு வாழ்ந்த அவர் ஆற்றியப் பணிகளைத் தொடர எண்ணிய அவரின் தந்தை திரு.பொ.மத்தியாஸ் அவர்கள் “தந்தை மகற்காற்றும் நன்றியாய்” தொண்டுகளைத் தொடர எண்ணி, ‘காலப்பறவை ஸ்டாலின் பெலிக்ஸ் மத்தியாஸ் பவுண்டேசன்’ என்றப் பெயரில் அறக்கட்டளை நிறுவி பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறார். அனைத்துப் பணியிலும் ஸ்டாலின் பெலிக்ஸின் உடன்பிறந்தத் தம்பி, திரு.எட்வின் பெலிக்ஸ் முழு ஒத்துழைப்புடன் பணியாற்றுகிறார்.