ஸ்டாலின் பெலிக்ஸ்

தோற்றமும், கல்வியும்

தமிழ்நாட்டில் குமரிமாவட்டம் – பள்ளியாடி – குமரித்தந்தை மார்ஷல் நேசமணி பிறந்த ஊர். இங்குள்ள மூரியங்கோணத்தில் 16 -11 -1980 – ல் தமிழ் ஆர்வலர் திரு.மத்தியாஸ் திருமதி.மரியம்மாள் ஆகியோரின் மகனாகத் தோன்றினார் திரு.ஸ்டாலின் பெலிக்ஸ்.

நாகர்கோவில், சுங்கான்கடை புனித சவேரியார் பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்தில் இளங்கலைப் பட்டம் பெற்றுச் சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனமொன்றில் பணியாற்றினார். மேலும் வரலாறு மற்றும் வணிக நிர்வாகவியல் கல்வியில் முதுகலைப்பட்டமும் பெற்றிருந்தார். தமிழ் மொழி மீது பற்றுக் கொண்ட ஸ்டாலின் பெலிக்ஸ், கல்லூரியில் பயிலும் போதே தாய் மொழி மீதும், தமிழ் அமைப்புகள் மீதும் மிகுந்த ஈடுபாடு காட்டினார்.

தமிழ்க் கலைகள், கவிதைகள் மற்றும் இலக்கியங்கள் மீது தீராத ஆர்வம் கொண்டவர். பள்ளி, கல்லூரி நாட்களில் பல்வேறு போட்டிகளில் வென்றவர்.

சிந்தனையும் செயல்பாடும்

சிறந்தச் சிந்தனையாளராக, சமூகச் செயல்பாட்டாளராக விளங்கிய ஸ்டாலின் பெலிக்ஸ், கல்வி, மருத்துவம், இரத்தத் தானம் எனத் தன்னால் இயன்ற உதவிகளை நேரடியாகவும், நண்பர்கள் மூலமாகவும் செய்து வந்தார்.

தமிழ் தேசியச் சிந்தனையாளரான இவர் ஈழ விடுதலைத் தொடர்பாகத் தமிழகத்தில் நடந்தப் பல்வேறு போராட்டங்களிலும் களமாடியவர். கூடங்குளம் அணு மின் நிலையத்திற்கு எதிரான அவரது எழுத்துக்களும் களப்போராட்டங்களும் அவர் ஒரு சூழியல் சிந்தனையாளர் என்பதற்குச் சான்று.

குமரி சுனாமி, தானே, சென்னை வெள்ளம், ஓகி  எனப் பெரும் பேரிடர்களில் நண்பர்களை ஒருங்கிணைத்து உதவிகள் தேவைப்படுவோருக்கு பல உதவிகள் வழங்கினார்கள்.

வாசிப்பில் மிகுந்த நாட்டம் கொண்டவர். குமரியின் குறிப்பாக பண்டையத் திருவிதாங்கூர் பற்றிய வாசிப்புகளையும், எழுத்துக்களையும் அவரது இறுதி நாட்களில் முன்னெடுத்திருந்தார்.

வட்டார நடையில் எழுதுவது அவரதுத் தனிச் சிறப்பு.

சிறந்த முற்போக்கு மற்றும் சமூகம் சார் சிந்தனையாளராக விளங்கிய அவர் தன் பேச்சிலும்,எழுத்திலும் முற்போக்கு மற்றும் தமிழ் மொழி உணர்வு சார்ந்த சிந்தனைகளை முன்வைத்ததோடு சாதி சமய அடிப்படைவாத போக்குகளுக்கு எதிராகவும் இருந்தார்.

அவரின் மரணத்திற்கு முந்தைய நாள் கடைசியாக எழுதிய காதலர் தின கவிதையில்,

“உங்கள் வீட்டுக்குள் தேடிப்பாருங்கள் உலகத்தின் உன்னதமான காதலர்கள் அங்கேயும் இருக்கலாம்” என்றார்.

காதல் குறித்த மரபை உடைக்கும் அற்புதமான வரிகள் இவை. இப்படியான ஆளுமையை இயற்கை விதி தனக்கு தானே ஏமாற்றிக்கொண்டது.

தொண்டுள்ளம்

கல்லூரிப் படிப்பை முடித்து, சென்னையில் தனியார் மென்பொருள் நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார் ஸ்டாலின் பெலிக்ஸ். இப்பணிக்காலமே தமிழ் சார்ந்து அவர் தீவிரமாகச் செயல்படத் தொடங்கியக் காலம். குறிப்பாக 2009-ல் நடந்த ஈழப்போரை ஒட்டித் தமிழ்நாட்டில் ஏற்பட்ட எழுச்சிப் போராட்டத்தில் முத்துக்குமாரின் மரணமும் அதனை ஒட்டிச் சென்னையில் தொடங்கிய மாணவர் எழுச்சியும் குறிப்பிடத்தக்கவை. இதன் பகுதியாக இவர் இருந்தார் .அதனை ஒர் இயக்கமாகக் கொண்டு சென்றதில் ஸ்டாலினின் பங்கு முக்கியமானது .குறிப்பாக ஈழப்போரின் விளைவாக ஏற்பட்ட இயக்கங்களில் தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் மத்தியில் உருவானச் சேவ் தமிழ் ( Save Tamil ) இயக்கம் முக்கியமானது. இதன் தொடக்கத்திற்கு ஸ்டாலின் பெலிக்ஸ் ஒரு விதை. இன்றைக்கு அது இளந்தமிழகம் என்றுப் பெயர்மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. பின்னர் இந்த இயக்கத்தை முன்னகர்த்துவதிலும், செயல்பாடுகளை வடிவமைப்பதிலும் இவரின் பங்கு முக்கியமானது என்பதுக் குறிப்பிடத்தக்கது.

 

பணித்தளத்தில்

வேலை வாய்ப்பின் பொருட்டு ஸ்டாலின் பெலிக்ஸ் ஜெர்மனி நாட்டுக்குச் சென்றார். அங்கும் தமிழ்ப்பணியுடன் சமூகப் பணியையும்
ஆற்றி வந்தார். தன் அனுபவங்களையும், சிந்தனைகளையும் தமிழ் உணர்வையும் “காலப்பறவை” என்ற  வலைப்பூவை (http://stalinfelix.blogspot.com) உருவாக்கி அதில் பதிவிட்டார்.

சமூகப்பணி

  • “வாட்ஸ்ஆப் வேலை வாய்ப்புக் குழு”  ஒன்றை உருவாக்கி  முன்னணி நிறுவனங்களின் மனிதவள அலுவலர்களைத் தொடர்பு கொண்டார். அதன் மூலம் பட்டதாரி இளைஞர் பலர் வேலை வாய்ப்புப் பெற்றனர்.
  • கடலூர் மாவட்ட மக்கள் ‘தானே’ புயலால் பாதிக்கப்பட்ட போது ஸ்டாலின் அம்மக்களுக்கு உதவிகள் பல செய்தார்.

சமூகச் சிந்தனையாளராக

  • தான் பயின்றப் புனித சவேரியார் பொறியியல் கல்லூரியின் நாட்டு நலப்பணி ஆண்டு மலரில் “முன்னாள் மாணவன்” என்ற நிலையில் இன்றையச் சமுதாயத்தில் இளைஞர்களின் பங்கு என்றத் தலைப்பில் கட்டுரை வெளியிட்டு ஆசிரியர்களின் பாராட்டைப் பெற்றார்.
  • “குழந்தை வளர்ப்புக் குறித்து எனது பார்வைகள்” என்றத் தலைப்பில் தான் பணியாற்றிய நிறுவனத்தில் பணியாளர்களுக்கான அறிவுசார் பதிவீடுகளில் பதிவிட்டு அறிஞர் பலரின் பாராட்டையும் பெற்றிருந்தார்.

மறக்க முடியுமா அந்த நாளை?

பல்லாயிரம் பேருக்குத் தொண்டாற்றப் பிறந்த ஸ்டாலின் பெலிக்ஸ் இன்னுயிர் 15.02.2019 அன்று இறைவனில் ஒன்றித்தது. ஜெர்மனி நாட்டில் இருந்த போது மூச்சுத்திணறல் ஏற்பட்டு, 39 வயதில் தன்னைப் படைத்தவருடன் சங்கமித்தது. இவர் மறைவுச் செய்தி பத்திரிகையில் இடம் பெற்றது. நாம் தமிழர் கட்சி சார்பில்  “பெலிக்ஸ் என்னும் மானுடன்” என்றத் தலைப்பில் “இரங்கற்பா” வெளியிடப்பட்டது.

“தமிழ்ச் சமூக நலன் காத்தத் தேசியச் சிந்தனையாளன், சமூகச் செயற்பாட்டாளன் மறைவு பேரிழப்பு”

– செந்தமிழன் சீமான்

தமிழ் ஆர்வலர் அனைவரையும் கண்கலங்க வைத்த நாளும் இந்நாளே! ஸ்டாலின் பெலிக்ஸ் உடலைப் பல்லாயிரகணக்கானவரின் பார்வைக்கு வைக்கப்பட்டு, 23-02-2019 அன்று, சொந்த ஊரான கன்னியாகுமாரி மாவட்டம், பள்ளியாடி- பெரியவிளையில் அவரது உடலானது அடக்கம் செய்யப்பட்டது.

ஸ்டாலின் பெலிக்ஸ் நினைவைப் போற்றும் வகையில் “காலப்பறவை ஸ்டாலின் பெலிக்ஸ் குடில்” என்ற பெயரில், நாம் தமிழர் கட்சியானது கருங்கல் அருகில் தன்னுடைய கிள்ளியூர் சட்டமன்ற தொகுதி தலைமை அலுவலகத்தை 29-11-2020 அன்று அவரது தந்தையை வைத்து திறந்து மரியாதை செலுத்தியது.

குடும்பம்

விளிம்பு நிலை மக்களின் பிள்ளைகளைத் தம் குழந்தைகளாகவே எண்ணிச் செயல்பட்ட ஸ்டாலினுக்குத் துணைவியார் மற்றும் மூன்று பிள்ளைகள். கணவரோடு எல்லா நிலையிலும் துணை நின்றவர் அவர் துணைவியார்.

உயிரென நேசித்த மூன்றுக் குழந்தைகள். தமிழ் மீதுள்ளப் பேரன்பால் குழந்தைகளுக்குத் தமிழிலேயே பெயர் சூட்டி வளர்த்தார்.

தடங்கள்

காலப் பறவை

ராவண விழா

19 ஆம் நூற்றாண்டில் திருவாங்கூர் ராஜா ரவி வர்மா வரைந்த ஓவியம் (SITA Under the Ashoka Tree).  மேலும் வாசிக்க 

குமரி சிஎஸ்ஐ நிர்வாகத்தால் கைவிடப்பட்ட ஒரு பெருங்கனவு

குமரி மாவட்ட CSI கிறிஸ்தவர்களை ‘அரை பார்ப்பனர்கள்’ என சுட்டி ஒரு பதிவு எழுதி இருந்தேன். மேலும் வாசிக்க 

முகிலனின் கதை

குமரி மாவட்டத்தில் உள்ள சில ஊர்களில் பெயர்களை ஆழ்ந்து கவனித்ததுண்டு. ஒவ்வொரு ஊரின் பெயர் காரணங்களை சொல்லித்தர… மேலும் வாசிக்க 

திருவாங்கூரின் கடைசி பிரஜை

எங்கள் ஊரின் கடைசி திருவாங்கூர் பிரஜையான ‘கிராப்பு தாத்தா’ என்ற தாசையன் தாத்தா மறைந்தார். மேலும் வாசிக்க 

புகைப்படத் தொகுப்பு